சென்னை: தமிழ்நாட்டின் மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்க தமிழகஅரசு முனைந்து வருகிறது. இதை எதிர்த்து, சென்னை அண்ணா சாலையில்  உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில்,  மின் ஊழியர்கள் முற்றுகையிட்டு திடீர் காத்திருப்பு போராட்டம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களை மத்தியஅரசு தனியார் மயமாக்கி வருவதை தமிழக முதலமைச்சர் கடுமையாக எதிர்த்து வருகிறார். இது தொடர்பாக  கடந்த சட்டசபை தொடரின்போது, காங். எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் கூறிய  முதல்வர் ஸ்டாலின், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது தேச நலனுக்கு எதிரானது. நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளேன். பொருளாதார வளர்ச்சிக்கும் சிறுகுறு தொழில் வளர்ச்சிக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கியமானது என தெரிவித்திருந்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதற்கு மாறாக, தற்போது தமிழ்நாட்டிலும் சில பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாநில தணிக்கை துறைக்கு தனியார் நிறுவனத்தை நியமித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது, மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதும்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணாசாலையில் 1000-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் முற்றுகையிட்டனர். மின்வாரிய ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளை ரத்து செய்யும் மின் வாரிய ஆணை எண் 2-ஐ ரத்து செய்ய வேண்டும். மின்சார உற்பத்தியை தனியாரிடம் கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நிலக்கரி கொள்முதல் அதிக விலைக்கு செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்ட பெண்கள், தொழிலாளர்கள் மின் வாரிய அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறி வளாகத்திற்குள் நுழைய முயன்ற ஊழியர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டம் நடத்த அனுமதி தராததால் வாக்குவாதமும் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

திமுக அரசின் இரட்டை வேடம் – அரசு தணிக்கைத் துறைகள் தனியாருக்கு தாரை வார்ப்பு! ஓபிஎஸ் கண்டனம்…