சென்னை

மிழக அரசு மேகதாது அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறி உள்ளார்.

கர்நாடக அரசு மேகதாது பகுதியில் அணை கட்ட திட்டம் தீட்டி உள்ளது.  இதற்கு தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.    தமிழக ஒப்புதல் இன்றி அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் கர்நாடக அரசு இந்த அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக ஒப்புதல் தேவை இல்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவிற்கு அருகில் 67.16 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட தண்ணீரை தேக்கி வைக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் ரூபாய் 5912 கோடி செலவில் அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிரானதாகும்.

கடந்த 1991 இல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டு 2007-இல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டு, உச்சநீதிமன்றம் 177.25 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த நீரைக் கூட உறுதியாக பெற முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தீர்ப்பின் அடிப்படையில் மாதாமாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்குவதில்லை.

எப்பொழுதுமே தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து செப்டம்பர் வரை நிலைமையை ஆய்வு செய்த பிறகே தமிழகத்திற்கு கர்நாடகம் நீரை வழங்கி வருகிறது. இத்தகைய நிச்சயமற்ற அணுகுமுறையின் காரணமாக தமிழக விவசாயிகள் தங்கள் சாகுபடியை திட்டமிட முடியாத நிலையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இரு மாநிலம் சம்மந்தப்பட்ட இத்தகைய நதிநீர் பங்கீடுகளில் அனைத்து மாநிலங்களுக்கும் நீரை பெறுகிற சமஉரிமை கோட்பாட்டை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதில் ஒரு மாநிலத்தை விட இன்னொரு மாநிலம் உயர்ந்தது என்றோ, அதிக உரிமை கொண்டது என்றோ கருதுவதற்கு வாய்ப்பில்லாத வகையில் தான் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஆனால், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மீது ஏகபோக உரிமை கொண்டாடுகிற வகையில் நீண்டகாலமாக புதிய அணைகளை கட்டுவதும், நீர்ப்பாசன பரப்புகளை விரிவுபடுத்துவதுமே அதனுடைய செயல்பாடுகளாக இருக்கிறது. இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

1950-இல் நிர்வாக வசதிக்காக மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டதே தவிர, ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு என்கிற மனோபாவத்தில் செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதைவிட இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தற்போது கர்நாடக அரசு கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்குக் கீழே மேகதாதுவில் அணை கட்டுவது, இரண்டு மாநிலங்களும் நீரைப் பகிர்ந்து கொள்கிற பிலிகுண்டுலுவிற்கு வருகிற நீரின் போக்கை அப்பட்டமாக தடுத்து நிறுத்தக் கூடிய செயலாகும். இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதன்

மூலமாக தமிழகத்தின் உரிமையைப் பறிக்கின்ற முயற்சியாகவே கர்நாடக அரசின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. தற்போது, மேகதாதுவில் அணை கட்டப்படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

கடந்த 2019 நவம்பர் 22-ஆம் தேதி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து அதற்குரிய அனுமதியையும் பெற்றிருக்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின்படி, காவிரி ஆற்றில் எத்தகைய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதாக இருந்தாலும் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறது.

அப்படி கூறப்பட்ட தீர்ப்புகளை மீறுகிற வகையில், தற்போது தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்று மேகதாதுவில் அணை கட்டுகிற பணிக்கு அனுமதி வழங்க வேண்டுமென கர்நாடக அரசு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கோரியிருக்கிறது.

கடந்த ஜூன் 2018 இல் உச்சநீதிமன்ற ஆணையின்படி காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் பங்கீட்டுக் குழுவும் அமைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவரும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரும் ஒருவராகவே இருப்பதை எதிர்த்து தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், தொடர்ந்து அதே நிலை தான் நீடித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி பிரச்சினையில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து காவிரி மேலாண்மை வாரியம் கவனிப்பதில்லை. இதற்கு மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சிய போக்கு தான் காரணமாகும்.

ஏற்கனவே, மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் மேகதாதுவில் அணை கட்ட தடை விதிக்க மறுத்து விட்டது. இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அ.இ.அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

ஏற்கெனவே தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பறிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாத அவலநிலையில் இருக்கிறது. இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்காமல் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க, சமீபகாலமாக மிகமிக நெருக்கமான உறவு கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் மூலமாகவும், உச்சநீதிமன்றத்தை அணுகுவதன் மூலமாகவும் உரிய தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்”  எனத் தெரிவித்துள்ளார்.