வீடு, அடையாள அட்டை இல்லா மக்களுக்கும் தடுப்பூசி : உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

Must read

சென்னை

வீடு மற்றும் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலையில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் தமிழகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி தமிழக அரசு இலவச தடுப்பூசி மற்றும் மருத்துவமனை வசதிகளை அதிகமாக்குதல் ஆகிய பணிகளைச் செய்துள்ளது.   ஆனால் வீடில்லாதோர் மற்றும் அடையாள அட்டை இல்லாதோர் இந்த வசதிகளைப் பெற முடியாத நிலை உள்ளது.  இதையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு மனு அளிக்கப்பட்டது.

சென்னை வழக்கறிஞர் எம்.முருகானந்தம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடையாள அட்டைகள் கேட்கப்படுகிறது. மேலும் அடையாள அட்டை இல்லாத ,வீடு இல்லாத மக்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவோ, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவோ முடியாத நிலையிலும் உள்ளனர்.

கொரோனா தடுப்பூசி செலுத்தினால் தான் அவர்களின் உயிரைப் பாதுகாக்க முடியும். எனவே தொற்று பாதிக்கும் அபாயம் அதிகமுள்ள வீடில்லா மக்களைக் கணக்கெடுத்து, அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் சி.சரவணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ”தமிழக அரசு வீடில்லாத மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையொட்டி இந்த வழக்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான வழக்குகளுடன் விசாரிப்பதற்கான தலைமை நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

More articles

Latest article