சென்னை

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ள சென்னை நகரில் தற்போது பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.  தமிழகத்தில் தினசரி பாதிப்பில் முதல் இடத்தில் இருந்த சென்னை நேற்று இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது.    இதுவரை தினசரி பாதிப்பு 4500 ஐ தாண்டி இருந்த நிலையில் நேற்று 3506 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதற்காகச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மருத்துவர்கள் மற்றும் கொரோனா பணியாளர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”மருத்துவர்கள் கொரோனா எதிர்ப்பில் தன்னலமற்ற தொண்டு புரிந்ததற்கு நான் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர்கள் கொரோனா எதிர்ப்பில் வீட்டுக்கு வீடு சோதனை, ஜுர முகாம்கள் மற்றும் தடுப்பூசி முகாம்கள் என மூன்று வகையில் உதவி உள்ளனர்.   வீட்டுக்கு வீடு சோதனை மூலம் நகரில் உள்ள நோயாளிகளைக் கண்டு சிகிச்சை அளித்து மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் சிறப்பான பணி புரிந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் மிகப் பெரிய சதனையாக ஜுர முகாம்களை கூறலாம்.  இதன் மூலம் ஆரம்பக் காலத்திலேயே கொரோனா அறிகுறியைக் கண்டறிந்து உடனடி சிகிச்சை செய்து பலரது உயிரைக் காக்க முடிந்தது.  இந்த முகாம்களை மருத்துவர்கள் மிகவும் திறமையுடன் நடத்தியமைக்கு சென்னை மக்கள் உங்களுக்கு மிகவும் கடன்பட்டுள்ளனர்.   மேலும் நோயாளிகளை அவர்கள் தொடர் கவனிப்பின் மூலமும் ஆம்புலன்ஸ் போன்றவை மூலமும் சரியான சிகிச்சை அளித்துள்ளனர்.

தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க ஒரே வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  தற்போது நாம் 45 வயதுக்கு மேற்பட்டோரில் 55% பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளோம்.   இந்த அளவுக்கு அதிகமான பேருக்குத் தடுப்பூசி போடுவதில் மற்ற நகரங்களை விட நாம் முன்னணியில் உள்ளோம்.

கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைக் காண்கிறோம்.  இன்னும் சில வாரங்களுக்கு நாம் இதைப் போல பணிகளைத் தொடர்ந்தால் நாம் இரண்டாம் அலை கொரோனா பரவலை முழுவதுமாக குறைக்க முடியும்.  இதற்காக மருத்துவர்கள் தங்கள் சேவையைச் செய்தமைக்கு அனைவரும் நன்றி செலுத்துகிறோம்”

எனத் தெரிவித்துள்ளார்.