சென்னை

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க மீண்டும் அங்கன்வாடிகளைத் திறந்து வீடுகளுக்கே உணவை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பள்ளிகள் மூடப்பட்டன.  இதனால் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு வழங்க இயலாத நிலை ஏற்பட்டது.   பல ஏழை மாணவர்கள் மதிய உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாக நேர்ந்தது.  கொரோனா ஊரடங்கால் பல குழந்தைகளின் பெற்றோர்கள் பணி இழந்துள்ள நிலையில் இது அவர்களுக்கு மிகவும் துயரத்தை அளித்தது

இதையொட்டி சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது வழக்கு தொடரப்பட்டது. .  இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் வர்மா மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தியின் அமர்வு நடத்தியது.

உயர்நீதிமன்ற அமர்வு குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்க அங்கன்வாடிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தியது.   விசாரணையில் தமிழக அரசு சார்பில் 2 வயது முதல் 6 வயது வரையான குழந்தைகளுக்கு அங்கன்வாடியைத் திறந்து  சத்துணவு மையங்களில் சமைத்து வீடுகளிலேயே உணவு வழக்க இன்னும் 15 நாட்களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் மற்ற மாணவர்களுக்குச் செப்டம்பர் 1 முதல் உணவு வழங்க உள்ளதாகவும் அரசு தெரிவித்தது. இதையொட்டி உயர்நீதிமன்ற அமர்வு மீண்டும் அனைவருக்கும் சத்துணவு வழங்குவதை விரைவாகச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.  மேலும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டதும் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.