சென்னை: சட்டக்கல்லூரிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க 26ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 14 அரசு சட்ட கல்லூரிகள், ஒரு சீர்மிகு சட்டக்கல்லூரி, ஒரு தனியார் சட்டக்கல்லூரி என மொத்தம் 16 சட்ட கல்லூரிகள் உள்ளன. அவற்றில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,275 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கும் நிகழ்வு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக  தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு (ஹானர்ஸ்) சட்டப் பட்டப் படிப்புகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் 5 ஆண்டு சட்டப் படிப்புகளில் 2021–22ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் நிகழ்வை, சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி  கூறியதாவது,

மாணாக்கர்கள் வரும் 26-ந் தேதி வரை  சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதிகள் 7 பேரின் விடுதலை குறித்து கவர்னர் தெளிவான முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் ஜனாதிபதி முடிவிற்கு அது அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இதில் ஜனாதிபதி விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதில் முடிவு எடுக்காத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டக்கல்லூரி அமைப்பதாக தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.