சென்னை: 
க்டோபர் மாதம் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலையில் இந்தியாவை உருக்குலைத்த கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே பேராயுதமாக பார்க்கப்படுகிறது. மூன்றாவது அலை ஏற்படுவதைத் தடுக்க துரிதகதியில் தடுப்பூசி செலுத்தி முடிக்க மாநில, யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கூடுதலாக இருப்பதால் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. பொதுமக்களிடம் ஆர்வம் கூடியிருப்பதால் தமிழ்நாட்டில் இரண்டாவது வாரமாக மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழ்நாட்டில் 16 லட்சத்து 37 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இரண்டாவது மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 15 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தின் முதல் 18 நாட்களில் 92 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. மாபெரும் தடுப்பூசி முகாம்களில் ஏற்கனவே இரண்டாவது தவணை செலுத்தத் தவறியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கேரளா, ஆந்திராவில் தொற்றுக் கூடிக்கொண்டே செல்லும் நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சதவீதம் 1.1 ஆக உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சென்னையில் 34 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மிக விரைவில் 4 கோடி தடுப்பூசி இலக்கை தொட வாய்ப்பு உள்ளது. அக்டோபர் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று  கூறினார்.