சென்னை

கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்ட  தமிழக அரசு முயல்வதாக திருமாவளவன் கூறி உள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 30172  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 254 பேர் உயிர் இழந்துள்ளனர்.   சராசரியாகக் கணக்கிடுகையில் இது மற்ற இடங்களை விட மிகவும் குறைவான விகிதம் ஆகும்.  எனவே இந்த எண்ணிக்கை குறித்து ஒரு சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர்.  அவ்வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் திருமாவளவன், “தமிழகத்தில் கொரோனாவால் மரணம் அடைவோர் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதைக் குறைத்துக் காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கொரோனா பேரிடரை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட முழு அடைப்புக் காலத்தை மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. கொரோனாக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆகவே உலக அளவில் இந்தியா 6 ஆம் இடத்துக்கு வந்துள்ளது. இந்திய அளவில்  கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது.

அப்படி இருக்க எல்லாக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து  தமிழக அரசு தளர்த்தி வருவதால் நோய்ப் பரவல் வெகு வேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கவலை அளிக்கிறது.

மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் எந்த எச்சரிக்கையையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை.  ஆகவே இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்களென்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. அத்துடன் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சோதனை செய்துவிட்டு வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

 பொது மக்களுடைய அழுத்தத்தினாலும், எதிர்க் கட்சிகளின் கடும் விமர்சனங்களின் காரணமாகவும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் இப்பொழுது தமிழக அரசால் வரன் முறைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை.  ஆகவே தனியார் மருத்துவமனைகள் யார் அதிகம் பணம் கொடுப்பார்களோ அவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதனால் உயிரிழப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதே அரசு சார்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது.  இதையொட்டி மக்களும் பயத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர். ஆகவே மக்கள் மேற்கொள்ள வேண்டிய எந்த முன்னெச்சரிக்கையையும், கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளாமல் போவதற்குத் தமிழக அரசே பொறுப்பாகும்.

கொரோனா உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கொரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. அந்த தகவல் உண்மையாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள்படும்.

ஆகவே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் பொதுமக்கள் விழிப்போடு இருந்து மருத்துவமனைகளில் அவ்வாறு இறப்புகளை மறைக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்”. எனத் தெரிவித்துள்ளார்.