டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    அந்த ஊரடங்கு மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.    ஆயினும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.   இந்நிலையில் மத்திய அரசு தற்போதைய ஊரடங்கில் பல விதிகள் தளர்வை அறிவித்துள்ளதால் நாட்டில் பல இடங்களில் அலுவலகங்கள், தொழிலகங்கள்,வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

 நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 10,438 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.   இந்தியாவின் பெருநகரங்களான டில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் மட்டும் மொத்த பாதிப்படைந்தோரில் பாதிக்கு மேலுள்ளனர்.   பாதிக்கப்பட்டோர் மற்றும் மரணமடைந்தோர் விகிதம் 4 நகரங்களில் ஒன்றாகவே உள்ளன.

 இதைத் தவிர அகமதாபாத், இந்தூர் மற்றும் புனே ஆகிய நகரங்களையும் சேர்த்தால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 60% பேர் உள்ளனர்.  நாட்டில் மொத்தம் மரணம் அடைந்தோரில் இந்த 7 நகரங்களில் மட்டும் 80%க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் நேற்று நள்ளிரவு இந்தியா கொரோனா பாதிப்பில் ஆறாம் இடத்தில் இருந்தது.  முதல் 5 இடங்களில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன் ஆகியவை இருந்தன.

 ஆனால் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கணக்கெடுப்பின்படி இந்த எண்ணிக்கை அதிகரித்து இந்தியா 5 ஆம் இடத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.   அந்த கணக்குப்படி அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரிட்டன் முதல் 4 இடத்தில் உள்ளன.

கொரோனாவால் உயிர் இழந்தோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா 12 ஆம் இடத்தில் உள்ளது.  இதுவரை இந்தியாவில் 1.18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்துள்ளனர்   இது உலக அளவில் 10 ஆவது இடமாகும்.