சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் உள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட சில கோவில்கள், தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒருசிலர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், தமிழகஅரசு கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு, கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகிறது.

இந்த நிலையில்,  திருக்கோயில் தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757 சேவை மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய உதவி மையத்தையும் அமைச்சர் சேகர்பாபு இன்று சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “திருக்கோயில்களில் ஏற்படக்கூடிய சிறு பிரச்சினைகளுக்கு கூட உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்களிடமிருந்து பெறப்படும் குறைகள் உரிய முறையில் நிவர்த்தி செய்யப்படும். முதற்கட்டமாக ஆயிரம் திருக்கோயில்களில் புகார் அளிப்பதற்கான தொலைபேசி எண் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பொதுமக்கள் சந்திக்கக்கூடிய எந்த விதமான பிரச்சனைகளாக இருந்தாலும் தொலைபேசி மூலம் ஆணையர் அலுவலகத்தில் தெரிவிக்கலாம்.

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அழுத்தமான நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாக எடுத்து வருகிறோம். தீட்சிதர்கள் நீதிமன்றம் செல்வோம் என்றார்கள். ஆனால் இதுவரை செல்லவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பொதுமக்களுக்கு குறைகள் இல்லாமல், அத்துமீறல் இல்லாமல் நிர்வாகம் நடத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். திருக்கோயில்களில் பயன்படுத்த முடியாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் முன்மாதிரி திட்டம். எத்தகைய விமர்சனம் வந்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.