சென்னை

ல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்காகத் தமிழக ஆளுநர் ரவி அமைத்த குழுவை தமிழக அரசு மாற்றி உள்ளது.

தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து உள்ளது.

முக்கியமாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ரவி – தமிழ்நாடு அரசு இடையே மோதல் நிலவி வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் இதை ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய ஆளுநர் ரவி ஒரு  குழு அமைத்தார்.  இந்தக் குழுக்களில் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.

 இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க, தமிழக ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. துணைவேந்தர் தேர்வுக்கு ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.