நூலக சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் குழு அமைத்த தமிழக அரசு

Must read

சென்னை

மிழக அரசு பொது நூலகச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முன்னாள் துணைவேந்தர் எம் ராஜேந்திரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர்  காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், “பொது நூலகங்களுக்கான நிதிநிலையை மேம்படுத்துதல் மற்றும் நிதி ஆதாரத்தை ஏற்படுத்தும் வகையில் தற்போதைய பொது நூலகச் சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப வாசகர்களுக்குச் சிறப்பான சேவைகளை வழங்கவும், நவீன தகவல் வளங்களை நூலகங்களுக்கு வழங்கவும், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பொது நூலகச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்

பொது நூலகங்களில் பணியாற்றும் நூலகர்களுக்கு பணிவிதிகளை முறைப்படுத்த வேண்டும். பொது நூலகங்களில் உள்ள அனைத்து பணியிடங்களிலும் நேரடி நியமன முறையில் பணியாளர்களை நியமிக்கும் வகையில் விதிகளை முறைப்படுத்த வேண்டும்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் புதிதாக அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகம் ஆகியவற்றை ஒரே அலகாகக் கருதி பணியிடங்களை உருவாக்கி அவற்றை நிரப்ப உரியத்  திருத்தங்கள் மேற்கொள்வதும் அவசியம். எனவே,இத்திருத்தங்களை மேற்கொள்ள ஓர் உயர்நிலைக் குழுவை அமைக்கலாம் என்றும் பொதுநூலக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இயக்குநரின் கருத்துருவை ஏற்று, தமிழ்நாடு பொதுநூலகச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளத் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம் ராஜேந்திரன் தலைமையில் ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்து அரசு ஆணையிடுகிறது.

இந்தக் குழுவில் எழும்பூர் கன்னிமாரா நூலக முன்னாள் இயக்குநர் என்.ஆவுடையப்பன், சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன், அமெரிக்கா தகவல் பணி முன்னாள் இயக்குநர் ஜெகதீஷ், புதுச்சேரி பல்கலைக்கழக நூலகர் சம்யுக்தா ரவி, திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சுந்தர் காளி, சட்ட ஆலோசகர் சி.என்.ஜி.தேன்மொழி ஆகியோர் உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள். பொது நூலக இயக்குநர், குழுவின் உறுப்பினர் மற்றும் செயலராக இருப்பார்.

இந்த உயர்நிலைக் குழு தனது அறிக்கையை 6 மாதங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article