சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக அரசு சார்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
குமரி ஆனந்தனின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில்  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

பெருந்தலைவர் காமராசரின் சீடராகவும், காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியவர் குமரி ஆனந்தன். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார். இவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். தற்போது தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.

இருந்தாலும், குமரி அனந்தன் இதுவரை எளிமையாக சாதாரண வீட்டிலேயே வாழ்ந்து வந்த நிலையில்,  தான் வாழ்வதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அவருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அண்ணா நகர் கோட்டத்தில் உள்ள உயர் வருவாய்க் குடியிருப்பில் வீடு ஒதுக்கிடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வீட்டிற்கான ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி அனந்தனிடம் வழங்கினார். இதற்கு குமரி அனந்தன் நன்றி தெரிவித்தார்.