சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை டி.ஜி.பி. சைலேந்திர பாபு முதலுதவி செய்து காப்பாற்றினார்.

உடற்பயிற்சியில் அதிக நாட்டம் கொண்டவரான தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு இன்று சென்னை மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

விடுமுறை நாளான இன்று கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் மக்கள் ஆர்வமுடன் கடற்கரையில் நின்று விளையாடிக் கொண்டிருந்தனர்.

திடீரென வந்த ஒரு பெரிய அலையில் சிக்கிய ஒரு சிறுவன் அலையில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டான்.

அவனை மீட்ட அந்த சிறுவனது உறவினர்கள் அவன் சுயநினைவு இல்லாமல் இருந்ததை கண்டு கலக்கமுற்றனர்.

கடற்கரையில் பரபரப்பாய் கூட்டம் கூடியதை அடுத்து அங்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபு அந்த சிறுவனுக்கு முதலுதவி செய்து அவனை உயிர்பிழைக்க வைத்ததோடு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

சென்னையில் குறிப்பாக வட சென்னையில் ரௌடிகளின் கொட்டத்தை அடக்கிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு-வின் இந்த மனிதாபிமான செயல் கடற்கரையில் கூடி இருந்தவர்களின் பாராட்டைப் பெற்றது.