சென்னை: புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

அண்மையில், புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது. பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை தாய் மொழி வழிக்கல்வி, மும்மொழி கொள்கை அமல்படுத்துதல், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில்  புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந் நிலையில் புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி குறித்து ஆராய 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதற்கான உத்தரவையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. குழுவில் கல்வியாளர்கள், அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.  முன்னதாக, உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.