சென்னை

மிழக ரசு தலைமைச் செயலருக்குச் சாலைப் பணிகள் குறித்து வாரந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்த முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். முதல்வர் மு க ஸ்டாலின் மடிப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ராமாபுரம், வேளச்சேரி, பெருங்குடி, ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைபாடுகளை முதல்வரிடம் எடுத்துரைத்தனர். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியம், சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.  முதல்வர் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கூறியிருந்ததையொட்டி, தென்சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தேன். 

மழைநீர் வடிகால், மெட்ரோ ரயில், மின்வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட பணிகளை உரிய திட்டமிடுதலுடன் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகாத வகையில் மேற்கொண்டு, சாலைகளை விரைவாகவும் தரமாகவும் அமைத்திட அமைச்சர்களையும் – அதிகாரிகளையும் அறிவுறுத்தியுள்ளேன். 

மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இனி, வாரந்தோறும் தலைமைச் செயலர் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும் உத்ரவிட்டுள்ளேன்”  

என்று தெரிவித்துள்ளார்.