நிதி நிலை அறிக்கை : நாளை முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

Must read

சென்னை

மிழக நிதிநிலை அறிக்கை 2021-22 தாக்கல் செய்வது குறித்து நாளை அதாவது ஆகஸ்ட் 4 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு முந்தைய அதிமுக அரசு பிப்ரவரி மாதம் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.  புதிதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள அரசு முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.   இதற்கான துறைரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் மு க ஸ்டாலின் நடத்தினார்.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி அன்று தமிழக 16 ஆம் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்  தொடங்கியது. பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.  அதன் பிறகு ஜூன் 24 ஆம் தேதி அன்று சட்டப்பேரவையை மறு தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி  முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் முறையாக முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதையொட்டி நாளை அதாவது  ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 11 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக அரசு விவசாயத்துக்காகத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.   இந்தக் கூட்டத்தில் அது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும் நிதி நிலை அறிக்கை தொடர்பான வெள்ளை அறிக்கை, புதிய தொழில் திட்டங்களுக்கான அனுமதி ஆகியவற்றுக்குக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கலாம் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.

 

More articles

Latest article