திருநெல்வேலி

தமிழக முதல்வர் பழனிச்சாமி பாம்பு மற்றும் பல்லியை விட மிகவும் விஷம் நிறைந்தவர் என மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகிறது.  திமுக சார்பில் ஒரு கூட்டத்தில் சசிகலா காலடியில் ஊர்ந்து சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி பெற்றதாகக் கூறப்பட்டது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாம் என்ன பாம்பா அல்லது பல்லியா ஊர்ந்து செல்ல எனக் கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் திருநெல்வேலியில் நடந்த திமுக பிரசாரக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், “ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.

நம்முடைய கழகத்தின், திருநெல்வேலி தொகுதியில்,  மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அருமைச் சகோதரர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் உதயசூரியன் சின்னத்திலும், அம்பாசமுத்திரம் தொகுதியில் கழக வேட்பாளர்,  மூத்த வழக்கறிஞரான இரா.ஆவுடையப்பன் உதயசூரியன் சின்னத்திலும், பாளையங்கோட்டை தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்  அப்துல் வகாப் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அப்பாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்திலும் ஆதரவு தர வேண்டுமென்று என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன் .

நான் கலைஞரின் மகனாக திக்கெட்டும் புகழ் பரப்பும் நெல்லைச் சீமைக்கு வந்திருக்கிறேன். வீரத்திற்கு பூலித்தேவன், கல்விக்குப் பாளையங்கோட்டை, ஆன்மீகத்திற்கு நெல்லையப்பர் என்று அனைத்து சிறப்பையும் பெற்றிருக்கும் இந்த நெல்லைச் சீமைக்குக் கருணாநிதியின் மகனாக உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு, அவர் எவ்வாறு முதலமைச்சர் ஆனார் என்று சொன்னால் கோபம் வந்துவிடும்.  நான் மட்டுமின்றி அவரைப்பற்றி எல்லோரும் பேசியிருக்கிறார்கள். ச்து மட்டுமல்ல, வலைத்தளங்களில் பார்த்திருக்கிறார்கள்,   அவர் தவழ்ந்து… ஊர்ந்து… சசிகலாவால் முதல்வர் ஆனார் என்பதை நான் பல கூட்டங்களில் சொன்னேன்.

நான் அதை அவமானப்படுத்துவதற்காகச் சொன்னேன் என்று அவரும் நினைக்கவேண்டாம். நீங்களும் நினைக்க வேண்டாம். நடந்த செய்தியை சொன்னேன்.   அவருக்குக் கோபம் வந்து விட்டது. அவர் நான் சசிகலாவால் முதல்வராகவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களால்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று ஆத்திரத்தின் எல்லைக்கே சென்று சொல்லி உள்ளார்.

நான் அதற்கு விளக்கமாகச் சொன்னேன். நீங்கள் சசிகலாவின் தயவில்தான் முதல்வர் பதவியை வாங்கினீர்கள் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் இல்லை என்று மறுக்கிறீர்கள். ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள். நீங்கள் தவழ்ந்து போனது உண்மையா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்.

இதை நான் மட்டுமா பார்த்தேன். இந்த நாடே அதைப் பார்த்துச் சிரித்தது. நான் தவறாக சொல்லியிருந்தால் பழனிசாமி அவர்களே என் மீது வழக்குப் போடுங்கள். என் மீது மட்டுமல்ல, அது மட்டும் அல்ல அதைப் பார்த்த அனைவர் மீதும் நீங்கள் வழக்குப் போடுங்கள். அதற்கு உங்களுக்கு முதலில் அதற்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டேன்.

அவர் இப்போது திடீரென்று நான் என்ன பாம்பா? பல்லியா? ஊர்ந்து போவதற்கு என்று சொல்லியிருக்கிறார். உண்மையில் அவர் ஒரு விஷப்பல்லி… விஷப்பாம்பு… காரணம் பாம்பு, பல்லிகளின் விஷத்தை விட துரோகம் தான் பெரிய விஷம்.   அத்தகைய துரோகத்தை செய்தவர்தான் பழனிசாமி.  அவர் யாரால் பதவி கிடைத்ததோ அந்த சசிகலாவிற்கு துரோகம் செய்தவர். முதலில் அம்மையார் ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவர். இப்போது அதிமுகவிற்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறார்.

இப்போது அதிமுக என்பது பாஜகவின் கிளைக்கழகமாக மாறிவிட்டது. பாஜகவினர் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே கையைக் கட்டிக் கொண்டு வாயைப் பொத்திக்கொண்டு கேட்டு ஒரு அடிமையாக இருக்கிறார். இவ்வளவு ஒரு அக்கிரமமான ஆட்சியை, அடிமைத்தனமான ஆட்சியை நடத்தில் கொண்டிருப்பவர்தான் பழனிச்சாமி.

தேர்தல் வரும் காரணத்தால் அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும் என்று அறிவித்திருக்கிறார். நான் கேட்கிறேன், கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போட்ட தேசத்துரோக வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? ஏன் இதுவரை வாபஸ் வாங்கவில்லை.?  மேலும் உதயகுமார், முகிலன், புஷ்பராஜ் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் வாங்கினீர்களா? இல்லை.

கடந்த 2011 முதல் இந்த பகுதியையே ஒரு எமர்ஜென்சி பகுதியைப் போல உருவாக்கி வைத்திருக்கிறார்களே தவிர, வேறு ஒன்றும் அல்ல.   நாளுக்கு நாள் விலைவாசி விஷம் போல் விண்ணை முட்டும் வகையில் சென்று கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இந்த ஆட்சியும் மத்திய அரசும் கவலைப்படவில்லை.

இதில் மிக மோசமானது என்னவென்றால் ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களை வழங்கி மக்கள் தலைகளில் கட்டவேண்டும் எனக் கட்டாயப்படுத்திச் செய்வது ஆகும்  தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் 34,000-க்கும் மேற்பட்ட கடைகளில் அரிசி, சர்க்கரை தவிர்த்து தேவையில்லாத பொருட்களை மக்கள் தலைகளில் கட்டுமாறு ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி, இன்றைக்கு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.   இந்த ஆட்சி  எந்த அளவிற்கு மோசமான நிலையில் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த உதாரணமே போதும்.” என உரையாற்றி உள்ளார்.