சென்னை:

டாஸ்மாக் குறித்து, தான் கூறாததை கூறியதாக  செய்தி வெளியிட்ட புதிய தலைமுறை, நியூஸ்- 18 ஆகிய தொலைக்காட்சி ஊடகங்கள் மீது அமைச்சர் தங்கமணி உரிமைமீறல் பிரச்சினை கொண்டு வந்தார். இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்ற நிலையில், விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் அந்த ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின்போது,   தமிழக மின் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர்  தங்கமணி, புதிய தலைமுறை, நியூஸ்-18 ஊடகங்கள் மீது  உரிமைப் பிரச்சினை கொண்டு வந்தார்.

அப்பபோது பேசியவர், தான்  “டாஸ்மாக் மது விற்பனை குறித்து தாம் சட்டசபையில் சொல்லாத ஒன்றை இந்த இரண்டு காட்சி ஊடகங்களும் செய்தி வெளியிட்டு தமது உரிமையை பறித்துள்ளது என்று குற்றம் சாட்டினார். இந்த புகார் உரிமைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து,  துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடி விவாதித்தது. இதில், ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான உரிமைக்குழு உறுப்பினர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், திமுக உறுப்பினர்கள்,  இரண்டு சேனல்களும் செய்தது தவறு என்றாலும் அவர்களை மன்னித்து விடலாம் என்று கூறியதாகவும், முடிவில், புதிய தலைமுறை மற்றும் நியூஸ்- 18 சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊடகங்கள், அமைச்சர் தங்கமணி புகார் தொடர்பாக 15 நாட்களில்  பதிலளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.