சென்னை:
பாஜக கூட்டணியில் 38வது கட்சி அமலாக்கத்துறை என திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், “கங்கையில் யாராவது மூழ்கினால் அவர்கள் புனிதமடைந்துவிடுவார்கள். அவர்களது பாவம் தீர்ந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதுபோல பாஜகவில் யாரேனும் சேர்ந்துவிட்டால் அவர்களை வழக்கில் இருந்து விடுவிப்பார்கள். உத்தமர் என்று சொல்வார்கள். ஊழலற்ற கட்சி என்று சொல்வார்கள். கங்கையில் எவ்வளவு அழுக்கு இருக்கிறதோ, அவ்வளவு அழுக்கு பாஜகவிலும் இருக்கிறது.

திமுகவுக்கு தொல்லை தரும் வகையில் பாஜக செயல்படுகிறது. பாஜக கூட்டணியின் 38- வது கட்சி அமலாக்கத்துறை. 38- வது புதிய கட்சியாக அமலாக்கத்துறையை சேர்த்துக்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது பாஜக. உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான், அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள பொன்முடி தயார். அமைச்சர் பொன்முடி விசாரணை தொடர்பாக அச்சமின்றி இருக்கிறார். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பணம் எங்கிருந்து வந்தது. அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு பாஜக மக்களவை தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கிறது. திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்” என சாடினார்.