சென்னை: தமிழகத்தில்  உளுந்தூர்பேட்டை அருகே சுமார் 4 ஏக்கர் அளவில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்றது.  தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி தேவஸ்தான் திட்டமிட்டு கோவில்களை கட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் கன்னியாகுமரியில்  ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதுபோல சென்னை அல்லது சென்னைக்கு அருகில் ஏழுமலையான் கோவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் ஒய்.வி ரெட்டி தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து,  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட இடம் ஒதுக்குவதாக தெரிவித்தார். ஆனால், அவர் மறைந்த பிறகு, சென்னையில் கோவில் கட்ட  இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து,  ளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏழுமலையான் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கான 4 ஏக்கர் நிலத்தினை உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு வழங்கினார். அதை  தேவஸ்தான அதிகாரிகளிடம் முதல்வர் பழனிசாமி ஒப்படைத்தார்.

அதைத்தொடர்நது, கோவில் கட்டுவதற்காக நிர்வாக ரீதியிலான அனுமதி கோரி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து ஏழுமலையான் கோயிலை கட்ட தனியார் மற்றும் பொதுமக்களிடமிருந்து  நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் இன்று திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. சுமார்  50க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் முன்னிலையில் யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.  அதைத்தொடர்ந்து இன்று காலை  கோபூஜை வழிபாடு செய்யப்பட்டு பெருமாள் கோயில் அமைய உள்ள இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அறங்காவல் குழு உறுப்பினர் குமரகுரு எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு, கோயிலுக்கான  அடிக்கல் நாட்டி கோயில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர். கோயில் விழா கல்வெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து  பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.