பெங்களூரு:
திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே. அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? என்று கர்நாடக அரசுக்கு என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
tippusultan
திப்புசுல்தான் பிறந்த நாளான நவம்பர் 10ம் தேதி, அரசு விழாவாக கர்நாடகத்தில் கொண்டாடப்படுகிறது.
இதை எதிர்த்து கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கர்நாடக (பெங்களூரு) உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், “திப்பு சுல்தானின் பிறந்தநாளை, அரசு விழாவாக கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும். திப்பு சுல்தான் ஒரு சுதந்திர போராட்ட வீரரல்ல.
இவர் தனது ஆட்சிகாலத்தில் பல நூறு கொடவா இன மக்களை கசாப்புக்கடைக்காரர் போல கொன்று குவித்தவர்.
கடந்த ஆண்டு திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவின்போது மோசமான சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. எனவே சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த விழா நடைபெறுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவின் விசாரணை, நீதிபதி முகர்ஜி மற்றும் நீதிபதி ஆர்.பி.புதிலால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், “திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரரல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே! அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? அதுகுறித்து அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்