டில்லி,
பிரபல நியூஸ்சேனலான என்.டி.டி.விக்கு ஒரு நாள் ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்தை கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் தாக்கினர்.
இந்த தாக்குதல் குறித்து என்டிடிவி இந்தியா சேனல் விரிவாக செய்திகளை வெளியிட்டது. அப்போது, இந்திய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் விதமான முக்கிய ராணுவ விவரங்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ndtv1
இது குறித்து விசாரணை நடத்திய பல்துறை அமைச்சர்கள் குழு, என்டிடிவி ஒளிபரப்பை ஒரு நாள் முழுக்க தடை செய்ய வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, நவம்பர் 9ம் தேதி இரவு 00.01 மணி முதல் நவம்பர் 10ம் தேதி இரவு 00.01 மணி வரை என்டிடிவி இந்திய சேனல் ஒளிபரப்பத் தடை விதித்தது. கேபிள் டிவி நெட்வொர்க்  ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
இதற்கு, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
editor
மேலும், பி.இ.ஏ எனப்படும் இந்திய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து என்டிடிவி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், மற்ற செய்தி தொலைக்காட்சிகள் கொடுத்த தகவல்களைத் தான் தாங்களும் ஒளிபரப்பியதாக கூறியுள்ளது. மேலும், அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், இது வரலாறு காணாத சம்பவம் என்றும் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துகொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரைக் காண சென்ற தலைவர்களைத் தடுப்பது, டிவி ஒளிபரப்பை தடை செய்வது … இது தானா நீங்கள் சொன்ன ‘நல்ல நாட்கள்’ என்று உமர் கேள்வி எழுப்பி உள்ளார்.