ஒரு நுண்ணுயிரி 24,000 ஆண்டுகளாக வடகிழக்கு சைபீரியாவின் பரந்த நிலங்களில் உறைந்து கிடந்தபின் மீண்டும் உயிர்ப்பித்து இனப்பெருக்கம் செய்துள்ளது.

பிடெல்லோய்ட் ரோடிபர் எனும் இந்த நுண்ணுயிரி ரஷ்ய விஞ்ஞானிகளால் யாக்கூடியவில் உள்ள அலசெயா நதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நுண்ணுயிரி கடுமையான குளிரைத் தாங்கக்கூடியது என்று அறியப்படுகிறது. முந்தைய ஆராய்ச்சிகளில் -20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் அதனால் ஒரு தசாப்தத்திற்கு உயிர் வாழ முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது.

தரையில் இருந்து 3.5 மீட்டருக்கு கீழே எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இந்த உயிரினம் மீட்கப்பட்டுள்ளது. இது 23,960 முதல் 24,485 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், உறைந்த நிலையில் நீண்டகாலம் உயிர்வாழும் உயிரினம் இது என்று ‘கர்ரன்ட் பையாலஜி’ எனும் இதழில் கூறப்பட்டுள்ளது.

உறைந்துபோன நிலப்பரப்புகள் பல திடுக்கிடும் அறிவியல் கண்டுபிடிப்புகளை வழங்கி இருக்கிறது.

இதற்கு முன்னர் வடக்கு சைபெரியாவில் இரண்டு இடங்களில் நெமடோட்க்கள் எனப்படும் நுண்ணிய புழுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அவை 30,000 ஆண்டுகள் மேல் பழமையானவை.