டில்லி:
‘‘வரி செலுத்துவோரின் நலன் கருதி பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க இது உகந்த நேரம்’’ என்று இன்போசிஸ் தலைவர் நந்தன் நில்கேனி தெரிவித்தார்.
இன்போசிஸ் தலைவரும், ஆதார் திட்ட வடிவமைப்பாளருமான நந்தன் நில்கேனி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. ஆனால், அதன் அடிப்படை நோக்கம் நிறைவேறவில்லை. பெரிய நிறுவனங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த வங்கிகள் சிறு நிறுவனங்களை புறக்கணிப்பதை தவிர்ப்பதற்காகவே இது கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது 21 வங்கிகளும் பெரிய நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து சிக்கி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பெரும்பாலான வங்கிகள் அதன் நோக்கத்தில் இருந்து விலகி மக்களின் பங்களிப்புடன் பங்குசந்தை விதிகளுக்கு கட்டுப்பட்டு தான் செயல்படுகின்றன. சிறிய அளவில் கடன் பெறுவோரின் தேவைகளை தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் அடையமுடியும். அதனால் வரி செலுத்துவோர் பயனடையும் வகையில் பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க இது தான் உகந்த நேரம்’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘பணம் செலுத்த ஆதார் மூலம் யுபிஐ க்யூஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் இது பெரிய அளவில் பரவும். கார்டு, வர்த்தகர் மூலமான பணம் செலுத்தும் முறை என்பது யுபிஐ பயணத்துக்கான கடைசி கட்டமாகும். 2016 அக்டோபரில் 50 லட்சம் என்று இருந்த யுபிஐ சார்ந்த பண பரிமாற்றம் கடந்த பிப்ரவரியில் 17.20 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் டிசம்பர் இறுதிக்குள் இது 100 கோடியை எட்டும்’’என்றார்.