ஐதராபாத்:

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அங்குள்ள மக்களால் பேசப்படும் உள்ளூர் மொழி தெரிந்தால் தான் மக்கள் பிரச்னைகளை நேரடியாக அறிந்து சேவை செய்ய முடியும்.

குறிப்பிட்ட சில அதிகாரிகள் மட்டுமே உள்ளூர் மொழியை கற்றுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய வருவார்கள். இந்த வகையில் தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்ட கலெக்டர் திவ்யா தேவராஜன் புதிய மொழி ஒன்றை கற்று வருகிறார்.

இந்த மாவட்டத்தில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதி அதிகம். இந்த மக்களுக்கு என்று தனி கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் உள்ளன. இவர்கள் கோண்ட் மொழி பேசுபவர்கள். இவர்களுடன் நெருங்கி பழகவும், அவர்களது கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ளும் வகையில் கோண்ட் மொழியை கலெக்டர் திவ்யா கற்று வருகிறார். தினமும் 30 நிமிடங்கள் இதற்காக ஒதுக்கி தனது முகாம் அலுவலகத்தில் சில வாரங்களாக பயில்கிறார். அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளர் துர்வா பூமனா கலெக்டருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இது குறித்து திவ்யா கூறுகையில்,‘‘தொடர்பு திறன் தான் எனது பலம் என்பதை உணர்கிறேன். அவர்களை சமாதானப்படுத்த அவர்களுடைய மொழியில் பேச முயற்சி செய்கிறேன். நான் பேசுவதை அவர்கள் புரி ந்துகொள்ளவில்லை என்றால் அவர்கள் எப்படி எனது கருத்தை ஏற்றுக் கெள்வார்கள். அதனால் கோண்ட் மொழியை கற்றுக் கொள்வது எனக்கு அவசியமாகிவிட்டது. அதோடு கோண்ட் கலாச்சாரம், பாரம்பரியதை அறிந்து கொள்வதில் எனக்கு தனிப்பட்ட விருப்பம் உள்ளது’’ என்றார்.

2009ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த திவ்யா மேலும் கூறுகையில், ‘‘பழங்குடி இன மக்கள் குறிப்பாக பெண்கள் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள முன் வருகின்றனர். நான் தெலுங்கு மொழியில் பேசினால் அவர்கள் எனக்கு பதிலளிக்க தயங்குகிறன்றனர்.

அதே சமயம் நான் சில கோண்ட் மொழி வார்த்தைகளை பயன்படுத்தினால் அவர்கள் தொடர்ந்து பேசுகின்றனர். இதன் மூலம் உண்மையான பிரச்னையை புரிந்துகொள்ள முடியும். 30 சதவீதம் கற்றுக் கொண்டேன். இதில் முன்னேற்றம் இருக்கும் என நம்புகிறேன். நான் சில வார்த்தைகள், வரிகள் பேசுகிறேன் என்றால் அதற்கு பயிற்சியாளர் தான் காரணம்’’ என்றார்.