டில்லி:

மத்திய அரசால் பிரம்மாண்டமான முறையில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பாலான தொகை பயன்படுத்தாமலேயே இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்மார்ட் சிட்டி, கங்கா தூய்மை திட்டம், தூய்மை இந்தியா திட்டம், மேக் இன் இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெரிய அளவிலான திட்டங்களை மத்திய பாஜக அரசு செயல்படுத்தியுள்ளது.

ஆனால், இது போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் குறைந்தபட்ச தொகை கூட செலவிடப்படாமல் முடங்கியிருக்கும் தகவலை நாடாளுமன்ற குழு வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அடிமட்டத்தை எட்டவில்லை என்பதையே இந்த நிதி முடக்கம் சுட்டிக் காட்டுகிறது.

மோடி அரசு அறிவித்த 6 உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு திட்டத்துக்கு 500.6 கோடி டாலரை ஒது க்கியது. இதில் வெறும் 21 சதவீதம் அதாவது 1.2 கோடி டாலர் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி நகரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் 1.8 சதவீதம் மட்டுமே செலவிடப்ப்ட டுள்ளது. இதர வீட்டு வசதி, துப்புரவு வசதிகள் மேம்பாட்டு ஒதுக்கப்பட்ட 100.5 கோடி டாலரில் 28 லட்சம் டாலர் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. 30 சதவீதத்துக்கும் குறைவான நிதி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி இந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இதில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத் துறை அமைச்சகம் முறையாக திட்டமிடாத காரணத்தால் அதன் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் போதுமான நிதி கிடைக்காமல் அனைவருக்கும் வீடு திட்டம் முடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஆனால் இதை மத்திய அரசு மறுத்துள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத் துறை அமை ச்சக செய்தி தொடர்பாளர் ராஜீவ் ஜெயின் கூறுகையில், ‘‘குழுவின் அறிக்கையில் நடந்து கொண்டிருக்கும் பணிகளுக்கு அளிக்கப்பட்ட நிதி பிரதிபலிக்கவில்லை.

அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் தான் முழு செலவு தொகையும் பிரதிபலிக்கும். திட்டத்தை அளவீடு செய்ய இந்த அறிக்கை ஒரு காரணி கிடையாது. பணி நிறைவடைந்த பின்னர் தான் அதை செயல்படுத்தும் நிறுவனத்துக்கு பணம் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார்.