கொல்கத்தா: அகமதாபாத்தில் இம்மாதம் 24ம் தேதி நடைபெறவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பகலிரவு டெஸ்ட்(3வது) போட்டிக்கான நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்து பதிலளித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

அவர் கூறியுள்ளதாவது, “அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்பனையாகிவிட்டன.

மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தொடர்பாக நான் ஜெய்ஷா உடன் பேசினேன். அவரும் டெஸ்ட் போட்டியைக் காண ஆர்வமாக இருக்கிறார். 7 ஆண்டுகளுக்குப் பின் அகமதாபாத்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது.

கடந்தாண்டு கொல்கத்தாவில் முதல் பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நடந்தது. அனைத்து இருக்கைகளிலும் ரசிகர்கள் அமர்ந்து போட்டியைக் காண வேண்டும் என விரும்பினோம். டி-20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் வர வேண்டும்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் ரசிகர்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்களா, அல்லது 50% மட்டுமே அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். நிச்சயமாக இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய போட்டியாக ஐபிஎல் இருக்கும்.

ஐபிஎல் ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது மினி ஏலம் என்றாலும், சில அணிகளுக்கு இது பெரியதாக இருக்கும். பல இடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சிஎஸ்கே அணிகள் இந்த முறை அதிகமாகப் பணியாற்ற வேண்டியதிருக்கும்.

இனிமேல், இந்தியாவில் டெஸ்ட் தொடர் நடந்தாலே, அதில் குறைந்தபட்சம் ஒரு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி நடத்துவது என்ற நடைமுறை கொண்டு வரப்படும். ஒவ்வொரு தலைமுறையும் மாறி வருகிறது. டெஸ்ட் போட்டியின் தோற்றத்தை பிங்க் பந்து மாற்றும் மற்றும் டெஸ்ட் போட்டியை உயிர்ப்புடன் வைத்திருக்கும்” என்றார் கங்குலி.