சென்னை,

ரசியலுக்கு வருவதாகவும், வரும் 21ந்தேதி முதல் தனது அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக வும் அறிவித்துள்ள கமல்ஹாசன், தனது கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார்.

சமீபகாலமாக டுவிட் மூலம் கருத்து தெரிவித்து வந்த கமல், தற்போது வார இதழ் ஒன்றில் எழுதி வரும் தொடர் வாயிலாகவும் பல கருத்துக்களை மக்களுக்கும், தனது நற்பனி மன்ற நிர்வாகிகளுக்கும் தெரிவித்து வருகிறார்.

அதன்படி, இன்றை வாரம் வெளிவந்துள்ள தொடரில், இளைஞர்கள்தாம் என் தலைவர்கள்- நான் ஒருங்கிணைக்கும் பிரதிநிதி என்று எழுதி உள்ளார்.

மேலும், வருகிற 21ஆம் தேதி முதல் தாம் நடத்த இருக்கும் கூட்டங்கள் ஒருவழிப்பாதையாக தாம் மட்டும் பேசுவதாக இருக்காது என்றும், பெரியார் பாணியில் கலந்துரையாடல்களாக இருக்கும் என்றும்,   இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தன்னை  சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். தாம் இந்து விரோதியல்ல என்றும் கூறியுள்ளார்.

தமது மகள் ஸ்ருதி உட்பட தமக்கு நெருக்கமான பலரும் பக்தியுடன் இருப்பதை தாம் தவறாகப் பார்க்கவில்லை என்று கூறிய கமல், அவர்களை வெறுக்க முடியுமா? என்றும், அது அவரவர் ஏற்றுக் கொண்ட வழிமுறை என்றும் தாம் இந்து அல்லது முஸ்லீம் கிறித்துவ மதங்களின் விரோதியல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.