சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய, மாநில அரசு விலக்கிக்கொண்டதுடன், மாஸ்க் அணிவது நல்லது என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 230 மட்டுமே உள்ளது என கூறியவர், தொற்று மேலும் பரவாமல் தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து, மாஸ்க் அணிதல் மற்றும் தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று  இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தயவு செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று  வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள இளநிலை மருத்துவ படிப்பில்  அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள 24 முதலாமாண்டு மருத்துவ இடங்களை நிரப்புவது குறித்து உச்சநீதி மன்றம் அடிப்படையில் செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.