திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட்டை வேறு தேதிக்கு மாற்றி கொள்ள ஏற்பாடு

Must read

திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருப்பதியில் ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆந்திரா மாநிலத்தை பொறுத்தவரை நண்பகல் 12 மணி முதல் அடுத்த நாள் காலை வரை 18 மணி நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

இருப்பினும், 12 மணிக்கு பின்னர் வருகை தரும் பக்தர்கள் உரிய தரிசன டிக்கெட்களை காண்பித்தால் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனாலும், குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே வருகை தருகின்றனர். இது போன்று வரலாற்றிலேயே திருமலைக்கு குறைவான பக்தர்கள் வருகை புரிந்ததில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ரூ.300 சிறப்பு தரிசனத்துக்காக டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் வேறு தேதியை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டால் திருமலைக்கு வர முடியாவிட்டால் வேறு தேதியை தேர்ந்தெடுக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More articles

Latest article