பாட்னா: மது அருந்துபவர்கள் மகா பாவிகள், மகாத்மா காந்தி சொன்னதை கேட்காதவன் மகா பாவி அவர்கள் இந்தியர்களே அல்ல,  பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம்,  அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் அங்கு மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் உள்ளது. திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதும், அதை குடிக்கும் பலர் கைது செய்யப்படு வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில்  நேற்றுமதுவிலக்கு மற்றும் கலால் (திருத்தம்) மசோதா 2022 கொண்டு வரப்பட்டு  நிறைவேற்றப் பட்டது.  இந்த மசோதா, சில வகை குற்றங்களுக்கு நேரடி  சிறைத்தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக் கிறது. மாநிலத்தில் மதுபானம் அருந்தினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை (மீண்டும் தவறு செய்தால்) விதிக்க மாநில அரசுக்கு இந்த மசோதா அனுமதி அளிக்கிறது.

இதுதொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றது. உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மாநில கலால் மற்றும் மதுவிலக்கு அமைச்சர் சுனில் குமார், கடந்த மூன்று ஆண்டுகளில் மதுவிலக்கு சட்டத்தை மீறி  மது குடித்தவர்கள் மட்டும் 1.27 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், சராசரியாக  ஆண்டு ஒன்றுக்கு 40,000 பேர் கைது செய்யப்படுகிறார்கள்.  2021ம் ஆண்டு மட்டும் 47,000 பேர் இந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என  தெரிவித்துள்ளார்.

இதையடுதுது சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் நிதிஷ்குமார்,  மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மது அருந்துவது கேடு என்று மகாத்மாகாந்தியும் கூறியுள்ளார். மது அருந்துபவர்கள் மகா பாவிகள். அவர்களை இந்தியர்களாகவே நான் கருதமாட்டேன். மகாத்மா காந்தி மதுவைக் கடுமையாக எதிர்த்தார். பாபு (மகாத்மா காந்தி)  கொள்கைக்கு எதிராக நடப்பவர்கள் பெரும்பாவிகள்,

மதுவை ஒழிக்க பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் யாரும் அவற்றை பின்பற்றுவதில்லை. ஒருவர் மது குடிக்க சென்று விஷ சாராயம் குடித்து இறந்தார். மது மோசமானது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தில் கள்ள மது விற்பனை அதனால் ஏற்படும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்களிலும், சிறைகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நிதிஷ் குமார் அரசு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வந்த நிலையில், நேற்று பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் தடை சட்டத் திருத்தம் 2022 கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.