மேக்ஸ் ஹெல்த்கேர், போர்டிஸ் ஹெல்த்கேர், அப்பல்லோ மருத்துவமனை ஆகிய கார்போரேட் மருத்துவமனைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகாரணங்களுக்கான கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து சி.சி.ஐ. கண்காணித்து வருகிறது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் கார்போரேட் நிறுவனங்களின் போட்டி ஒழுங்குமுறை ஆணையமான சி.சி.ஐ. (காம்படீஷன் கமிஷன் ஆப் இந்தியா) இந்தியாவின் மூன்று முன்னணி கார்போரேட் மருத்துவமனைகளிடம் விளக்கம் கேட்டுள்ளது.

2015 ம் ஆண்டு மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை மீது அதிக கட்டணம் வசூலிப்பதாக விவேக் சர்மா என்பவர் அளித்த புகார் மீதான விசாரணையில் பெக்டோன் டிக்கின்ஸன் இந்தியா நிறுவனம் தயாரித்த ரூ. 11.50 அதிகபட்ச சில்லறை விற்பனை உள்ள சிரஞ் 19.50 ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும் அதே நிறுவனத்தின் அதே சிரஞ் மற்றொரு மருத்துவமனையில் 10 ரூபாய்க்கு வாங்கியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து 2018 மற்றும் 2021 ஆகிய இருவேறு காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட பல மடங்கு கூடுதலாக விற்பனை செய்வது தெரியவந்தது.

மருந்து பொருட்களின் விற்பனை மூலம் சுமார் 500 சதவீதத்துக்கும் மேல் லாபம் ஈட்டுவதாக தெரியவந்ததை அடுத்து இந்த மூன்று கார்போரேட் மருத்துவமனைகள் எங்கிருந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குகின்றன, என்ன விலைக்கு வாங்கப்படுகிறது, என்ன விலைக்கு விற்கப்படுகிறது உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் வழங்குமாறு சி.சி.ஐ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதல் முறையாக நாட்டின் முன்னணி கார்போரேட் மருத்துவமனைகள் மீது சி.சி.ஐ. இதுபோன்ற விசாரணையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சி.சி.ஐ. மேற்கொண்டு வரும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார், போர்டிஸ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இதுகுறித்து விளக்கமளிக்க மறுத்துள்ளது.

ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த கண்காணிப்பு நடவடிக்கை டெல்லி மட்டுமன்றி நாட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள மருத்துவமனைகள் மீதும் தொடரும் பட்சத்தில் அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க வழிபிறக்கும் என்று நம்பப்படுகிறது.