டில்லி,

தேர்தலில் பங்குபெற்று  ஓட்டுபோடாதவர்கள், தேந்தெடுக்கப்பட்ட அரசை கேள்விகேட்க தகுதியற்றவர்கள் என்று உச்சநீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

சமூக நல ஆர்வலர் தனேஷ் லேஷ்தன் என்பவர் நாடு முழுவதும் சாலை மற்றும் நடை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நீதிபதிகள், மனுத்தாக்கல் செய்த தனேஷிடம், “நீங்கள் வாக்களித்தது உண்டா?’ எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு  தனேஷ்,’நான்  இதுவரை வாக்களித்ததே இல்லை’ எனக் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள்  “நீங்கள் இதுவரை வாக்களித்ததே இல்லை. அதனால் நீங்கள் அரசாங்கத்தை  விமர்சிக்கவோ, கேள்வி கேட்கவோ தகுதியற்றவர்” என கூறினர்.

மேலும், “ஒரே தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை, இதுமாநிலங்கள் சம்மந்தப்பட்டது/

நாங்கள் அப்படி உத்தரவிட்டோமானால் அவமதிப்பு வழக்குகளும், தேவையற்ற வழக்குகளும் இங்கே குவிந்து கிடக்கும், எனவே இது சாத்தியமற்றது” எனக் கூறினர்.

மேலும் இதுகுறித்து அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தனேஷுக்கு அறிவுறுத்தினர்.