1984 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினராக உள்ள ஏ.கே. அந்தோணி தேசிய அரசியலில் இருந்து விலகப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

2004 ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேர்தலில் அப்போது முதலமைச்சராக இருந்த ஏ.கே. அந்தோணி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தேசிய அரசியலில் தீவிரம் காட்டினார்.

2005 ம் ஆண்டு முதல் ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்து வந்த ஏ.கே.அந்தோணி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார், தற்போது தனது எம்.பி. பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி சொந்த மாநிலமான கேரளாவுக்கு திரும்பி செல்லப்போவதாக கூறியிருந்தார்.

டெல்லியில் இருந்து கேரளா செல்ல இருக்கும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. அந்தோணி, “உயிரோட்டமுள்ள பேரியக்கம் காங்கிரஸ் கட்சி, அதன் இன்றைய நிலை வேதனை அளிப்பதாக இருந்தாலும் அது மீண்டும் எழுச்சி பெரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவும் கடந்து போகும், வரலாற்றில் பத்து அல்லது 15 ஆண்டுகள் என்பது ஒரு குறுகிய காலம்.” என்று கூறினார்.

மேலும், “எத்தனையோ மதங்கள், ஜாதிகள் மற்றும் மொழிகள் இணைந்து வாழும் ஒரே நாடு இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமையே நாட்டின் பலமாக உள்ளது. அந்த பன்முகத்தன்மை இப்போது ஆபத்தில் உள்ளது. பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு பதிலாக, எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான ஒற்றைத் தன்மையை திணிக்கும் முயற்சி இப்போது உள்ளது.” என்று பா.ஜ.க. அரசை சாடினார்.

மே மாதம் 13 முதல் 15 வரை மூன்று நாட்கள் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற இருக்கும் தேசிய முகாமில் நாட்டில் நிலவி வரும் வகுப்புவாதம், வெறுப்பு அரசியல் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், 2024 ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்த அவர்,

தேசிய அரசியலில் இருந்து விலகி கேரளா செல்லும் நிலையில் அந்த மாநில காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்க உள்ளதாகவும் தற்போதுள்ள மாநில கட்சி அமைப்பில் இடம்பெற போவதில்லை என்றும் உறுதிபட தெரிவித்தார்.