சென்னை:

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தலை  ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் ஆணையத் துக்கு சரமாரியாக கேள்வி விடுத்துள்ளது.

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற இருப்பதாக அறிவித்த தேர்தல் ஆணையம் உடனடியாக வேட்புமனு தாக்கல் தேதியும் அறிவித்தது.  இதைத்தொடர்ந்து தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு காட்டி வந்தனர்.

திருவாரூர் தொகுதியானது மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் தொகுதி என்பதால், அதை மீண்டும் கைப்பற்ற அதிக கவனம் செலுத்தியது. இதன் காரணமாக பரபரப்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

அதே வேளையில் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் ஒருசாரார் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று காலை தேர்தல் ஆணையம், திருவாரூர் தொகுதிக்கான இடைத் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இதற்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்து இருந்தாலும் மற்றொரு சாரார் தேர்தல் ஆணையம் மீது கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிய கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையம் மீது கடுமையாக குற்றம் சாட்டினார்.

கஜா புயல் பாதித்த நிலையில் திருவாரூரில் தேர்தல் நடத்த ஆணையம் எப்படி முடிவு செய்தது? என்றும்,  திருவாரூரில் முன்கூட்டியே தேர்தல் ஆணையம் ஏன் ஆய்வு செய்யவில்லை ? என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில்,  ஒரு தொகுதிக்கு மட்டும் இடைத்தேர் தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது நியாயமில்லை என்று குற்றம்சாட்டியவர்,  ஏப்ரல் மாதம் வரை தமிழகத்தில் எந்தவொரு தேர்தல் நடத்தக்கூடாது என தலைமைச் செயலர் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல.

இவ்வாறு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.