சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் அன்றே திமுக – அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பகிர் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார் என பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இது தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் தொகுதியின் மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக தோளில் சுமந்த கட்சி காங்கிரஸ் என்பதை நினைவு படுத்த விரும்புவதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கிணங்க திமுகவும், அதிமுகவும் ஆட்சியமைக்கத் திட்டமிட்டனர். மே 04- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.00 மணியளவில் பாஜகவின் முக்கிய தலைவர், அதிமுக மற்றும் திமுக தலைவர்களைத் தொடர்புக் கொண்டு பேசினார். விஜய் ஆட்சியமைக்கக் கூடாது என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருந்தன. இதுவெல்லாம் எங்களுக்கு தெரிந்தும், வெளியில் சொல்லாமல் இருந்தோம் என்றவர், திமுகவின் அனைத்து கொள்கைகளையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்தார் என்று குற்றம் சாட்டியவர்.
தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக்கி விடக்கூடாது என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடைசியில், அந்த முயற்சியில் தோற்றுவிட்டார் என்று கூறியவர்,
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தர முடிவெடுத்தார்கள். பாஜகவின் இந்த முயற்சிக்கு ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்துள்ளது. இதெல்லாம் வெளியில் கூறினால் தப்பாகிவிடும் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருந்தோம் என்றவர், பொய் நாடகங்களை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வெகு விரைவில் பாஜகவின் துணையோடு அதிமுகவும், திமுகவும் கூட்டணி வைப்பார்கள். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக திமுக எம்.பி.க்கள் செயல்படுவார்கள் என்ற மாணிக்கம் தாகூர், திமுக இளைஞரணிக் கூட்டத்தில் காங்கிரஸ் குறித்து வன்மமாகப் பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாஜக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் எந்த தியாகத்தையும் செய்வோம். அதிமுக- திமுக கூட்டணி ஆட்சி என்ற பிளானை காங்கிரஸ் உடைத்து பிளாப் ஆக்கியுள்ளது. தவெக கூட்டணி ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். தவெக, காங்கிரஸ், விசிக இணைந்துள்ள கூட்டணிக்கு விரைவில் பெயர் சூட்டப்படும். ஒருமித்த கூட்டணியாகவும், பலமான கூட்டணியாகவும் இருக்கும்.
கோயம்புத்தூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தமிழ்நாட்டு முதலமைச்சர் கவனத்தோடு அதிகாரிகளை இன்னும் வேகப்படுத்துவார் என நம்புகிறேன். சம்பவம் தொடர்பாக உடனடியாக டிஜிபியை அனுப்பி வைத்தது. பெண் அதிகாரி மூலமாக தீவிர விசாரணை நடத்தியது வரவேற்கத்தக்கது” என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]