சென்னை :

மிழகஅரசு சார்பில் விற்பனை செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவர் படத்தை அச்சடிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தமிழக  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 4ந்தேதி தஞ்சை மாவட்டம்  பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது சாணம் வீசப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் திருவள்ளுவர் தொடர்பான கருத்துக்கள் டிரெண்டிங்காகி வருகிறது.

திருவள்ளுவர் குறித்த சர்ச்சையைத் தமிழ்நாடு பாஜகதான் தொடங்கி வைத்த நிலையில், திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசப்படுவதும், பட்டை அடிப்பதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், பாஜகவினர்  தரப்பில், திருக்குறளை பால் பாக்கெட்டுகளில் அச்சிட்டு, பிரபலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

ஏற்கனவே திருவள்ளுவர் குறித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருவள்ளுவர் ஒரு இந்துதான் என்றுதெரிவித்திருந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சடிக்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் உடன் திருவள்ளுவர் சிலை அச்சடிப்பது குறித்தும், தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்து உள்ளார்.

“ஆவின் பால் பாக்கெட்டுகளில் முதல்வரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் 15 நாட்களில் திருக்குறளை அச்சிட்டு விநியோகிக்க உள்ளோம். திருவள்ளுவரின் படத்தையும் இடம்பெறச் செய்வது குறித்தும் பரிசீலிக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் திருக்குறளை மாற்றி அச்சிடுவோம் என்று கூறி உள்ளார்.