திருப்பாவை –18 ஆம் பாடல்

ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார்.   இந்த 30 நாட்களும் அவர் தன்னுடன் நோன்பு இருக்க தனது தோழிகளை அழைப்பது போல் பாடிய பாடல்கள் திருப்பாவை ஆகும்.

இன்று நாம் திருப்பாவை 18 ஆம் பாடலைக் காண்போம்

திருப்பாவை 18 :

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!

பொருள் :

மதநீர் பெருகும் பலம் பொருந்திய ஆண் யானைகளை உடையவனும்,போரில் பகைவரை கண்டு ஓடி பின்வாங்காத வலிமையான தோல் உடையவனுமான நந்தகோபாலனுக்குப் பரிசாக அமைந்த அவர் மருமகளே !

நப்பின்னை பிராட்டியே !

வாசனை கமழும் கூந்தல் உடையவளே! உன் கடைவாசல் கதவைத் திற!

கோழிகள் உறக்கத்தில் இருந்து விழித்து எல்லா இடங்கங்களிலும் கூவும் காட்சியை நீ பார்க்கவில்லையா ?

குருக்கத்தி எனும் மாதவிக் கொடியின் மேல் அமர்ந்து பல விதமான குயில்கள் பாடத் துவங்கி விட்டன.நீ காணவில்லையா ?

பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக்கொண்டவளே!

உன் கணவனான கண்ணனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம்.

இதை அறிந்து,அழகிய வளையல்கள் ஒலிக்க,உன் செந்தாமரைக் கையால் வாசல் கதவை மகிழ்ச்சியுடன் திறக்க வேண்டும் !