திருப்பத்தூர் அய்யனார் கோவில்
கைலாயத்திற்கு நிகரான திருப்பத்தூர் …
சேர நாடு திருவஞ்சிக்குளம் மன்னன் சேரமான் சிவபெருமானின் தோழரும் நால்வரில் ஒருவரான சுந்தரரை தன் குருவாய் கொண்டு சிவத்தொண்டு ஆற்றி வந்தார்.  சிவனின் மீது கொண்ட அதீதமான அன்பினால் தன்னை காதலனாகவும் சிவனைக் காதலியாகவும் பாவித்து திருக்கயிலாய ஞான உலா என்ற சிறந்த பாடலை இயற்றினார்.
அதனைச் சுந்தரரிடம் தெரிவித்தபோது அதன் சிறப்பினை உணர்ந்து இந்த நூலை திருக்கயிலையிலேயே அரங்கேற்ற முடிவு செய்து சேரமான் குதிரையில் வர சுந்தரர் ஐராவதத்தில் பயணித்து திருக்கயிலை அடைந்தார்
கையிலையின் நாதனாகிய சிவபெருமான் தன அன்பன் சுந்தரரின் வேண்டுகோளுக்கு இசைந்து திருக்கையிலைக்கு நிகராக பூமியில் விளங்கக் கூடிய திருப்பத்தூர் என்ற புனித ஸ்தலத்தில் இந்நூலை அரங்கேற்றுவாய் என்று கூறி தன அருகில் இருந்த மா சாத்தனார் எனும் சாஸ்தாவிடம் (ஐயனார்). நூல் சுவடியைக் கொடுத்து மூவரையும் திருப்பத்தூர் அனுப்பினார்.
அரங்கேற்ற வேளையில் தான் தன துணைவியுடன் வருவதாக உறுதி அளித்தார்.
அத்தகைய அரங்கேற்றம் நடைபெற்ற இடத்தில் கற்றளியால் எழுப்பப்பட்ட இரண்டு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய கோயிலில் தன் இரு மனைவியர் பூரணை புஷ்கலை உடன் அரங்கேற்ற ஐயனார் எனும் பெயரில் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
கோயிலின் பிரதான வாசல் வழியாக உள்ளே சென்றால் கருங்கல்லால் செதுக்கப்பட்ட பலகனி (ஜன்னல்) இருக்கும். அதிலுள்ள துவாரங்களின் மூலமாக மூலவரைத் தரிசிக்கலாம். பலகணிக்கு முன் உயரமான கருங்கல்லால் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆன இதன் முன் உள்ள தொட்டியில் சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம்.
தமிழக மன்னர்கள் போரிற்குச் செல்லும் முன்பு தங்களது நாட்டின் மண்ணை அய்யனாரின் பாதத்தில் வைத்து வணங்கி தாங்கள் திரும்பி வரும் வரை நாட்டு மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று வேண்டிச் செல்வதும் அதே போல் போர்முடிந்து திரும்பிய பின் ஐயனார்க்குப் படையல் வைத்துச் சிறப்பிப்பதும் வழக்கமாக இருந்துள்ளது.