திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவில், அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் அமைந்துள்ளது.

திருமழபாடி திருக்கோவிலில் உள்ள சிவனுக்கு பெயர் வஜ்ரஸ்தம்பநாதர் (வச்சிரதம்பேஸ்வரர், வைத்தியநாதசுவாமி, வயிரத்தூண் நாதர்), அம்மனின் பெயர் அழகம்மை (சுந்தராம்பிகை, பாலாம்பிகை). இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை புருஷாமிருகம் பிரம்ம லோகத்தில் இருந்து எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரம்மாவால் எவ்வளவு முயன்றும் அவரால் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று இந்திரன் வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இதையே திருநாவுக்கரசர் தன் பாடலில் “மறைகலந்த மழபாடி வயிரதூணே” என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ “வரிந்த வெஞ்சிலை யொன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே” என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.

இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திரு நந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிஷ்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாத புனர்பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம் தோறும் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்தி தேவருக்கு நடைபெறும் திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.

கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.