சென்னை: மாநில தலைநகர் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க  தீர்வு காணும் வகையில் விரைவில் திருமழிசை புறநகர் பேருந்து நிலைய பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது கடந்த 2019ம் ஆண்டு, திருமழிசை அடுத்த குத்தம்பாக் கத்தில் அதற்காக 20 ஏக்கர் நில பரப்பளவில், 150 கோடி ரூபாய் செலவில், புதிதாக, நான்காவது புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதன் மதிப்பு கூறியது.

பின்னர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், திருமழிசை துணைக்கோள் நகர திட்டத்தில் இருந்து, இதற்காக, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இந்த நிலத்தில், 336 கோடி ரூபாயில், ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், பிப்., 2021ல் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 211 பேருந்துகளை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து, மேற்கு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்கள் செல்லும் பேருந்துகள், இங்கிருந்து இயக்கப்படும் என்றும், மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 70 புறநகர், 30 ஆம்னி, 36 மாநகர பேருந்துகளை இயக்கவும், 48 புறநகர், 27 ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்,  பேருந்து நிலையத்தின் கீழ்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு, வாகன நிறுத்தம் வசதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. திருமழிசை குத்தம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை, இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் எனவும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், வெளியூர் பேருந்துகள் எதுவும் சென்னைக்குள் வராது என்ற நிலை ஏற்படும். தற்போதுள்ள கோயம்பேடு பேருந்து நிலையம், முழுமையாக மாநகர பேருந்துகளின் பயன்பாட்டுக்கு மாற்றப்படும். இதனால், சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.