தஞ்சாவூர்:
ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரதமரின் பொருளாதார அறிவிப்பு தோல்வி அடைந்துள்ளது என்றும், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் விடுதலைசிறுத்தை தலையிடாது என்றும் அதன் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட புத்த தம்ம சங்கம் சார்பில் நடைபெற்ற தீட்சை விழாவில் கலந்துகொண்டு 13 பேருக்கு தீட்சை அளித்து பேசினார்.
 

 
 
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பருவமழை மாற்றத்தால் வார்தா புயல் ஏற்பட்டு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நடவடிக்கையால் பொருளாதாரம் நிலை குலைந்துவிட்டது. பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பியது. ஆனால் தெளிவான விளக்கத்தை பிரதமர் அறிவிக்கவில்லை.
அதற்கு மாறாக அரசியல் கட்சிகளுக்கு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்தால் முழு வரிவிலக்கு என அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே பிரதமரின் பொருளாதார நடவடிக்கை தோல்வி அடைந்த ஒன்று.
தமிழகத்தில் வறட்சியால் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் அல்ல, விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயக்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீதான தாக்குதல் சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இதை கண்டித்துள்ளார். தி.மு.க. தொண்டர்கள் இந்த சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம்.
கருணாநிதிகூட இது போன்ற சம்பவங்களை விரும்பியிருக்க மாட்டார்.
அ.தி.மு.க.வில் நடைபெறும் சம்பவம் உள்கட்சி விவகாரம். அதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலையிடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
 
VCK Leader Thirumavalan criticises the economic policies of PM.  Wont comment on AIADMK succession as its their party matter.