திருக்கடையூர்:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் லிங்கமானது சுயம்புவாக தோன்றியது. இங்கு வீற்றிருக்கும் மூலவர் ஒரு லிங்கமாக இருந்தாலும் உற்றுப் பார்க்கும் சமயத்தில், மற்றொரு லிங்கம் பிம்பமாக நம் கண்களுக்குப் புலப்படும் என்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு. சிவபெருமான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலமும் இது தான்.

தன் பிறப்பை பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 வதாக திருக்கடையூரில் உள்ள சிவ தளத்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு கடைசி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரை பறிப்பதற்காக பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனை பார்த்து பயந்த மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுக்க கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அந்த கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டும் விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்கு போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரை, எம்பெருமான் சும்மா விட்டு விடுவாரா? கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை கீழே தள்ளி சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து விட்டார். அதன்பின்பு மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார்.

இத்தனை பெருமை வாய்ந்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது.