பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பே இல்லை: போக்குவரத்து துறை அமைச்சர்

Must read

சென்னை,

மிழகத்தில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் காரணமாக பல இடங்களில் பயணிகளுக்கும் நடத்துனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

பஸ் கட்டணத்தை குறைக்கும்படி எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கட்டண குறைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் உயர்வாக நேற்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று அனைந்து பேருந்துகளிலும் பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர், போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக அரசு மானியம் வழங்கி வருகிறது. இருந்தாலும்,  வருவாய்க்கும்- செலவிற்கும் உள்ள இடைவெளி இழப்பு தினமும் ரூ.9 கோடி என்ற அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்றார்.

இருந்தாலும், பொதுமக்கள் நலன் கருதி, கடன் சுமையை அரசே ஏற்றுக் கொண்டு நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரூ.12,059.17 கோடியை  மானியமாக வழங்கி உள்ளது என்றார்.

தமிழகத்தில்  கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்ற அமைச்சர், பொதுமக்களை சங்கடப்படுத்த விரும்பாமலேயே,  அரசு பஸ் கட்டண உயர்வை இதுவரை உயர்த்தாமல் தவிர்த்ததாகவும், தற்போது இயலாத நிலையில்,  நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில்  பஸ் கட்டணம்  உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

ஆகவே,  இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது. எனவே பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என்ற அவர், பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்,  இந்த கட்டணம் மற்ற மாநிலங்களின் பஸ் கட்டணத்தை ஒப்பிடுகையில் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

More articles

Latest article