டெல்லி:  கார் திருட்டில் நாட்டின் தலைநகர் டெல்லி முதலிடத்தில் உள்ள நிலையில், சென்னை இரண்டாம்  இடத்தில் இருப்பதாக தனியார் காப்பீடு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார் திருட்டில் முதலிடத்தை தலைநகர்  டெல்லியும்,  2வது இடத்தை சென்னையும், 3வது  இடத்தை பெங்களூருவும் பிடித்துள்ளது என காப்பீடு நிறுவனமான  அக்கோவின் ‘தெஃப்ட் அண்ட் தி சிட்டி’ என்ற தலைப்பில் அறிக்கையின் இரண்டாவது பதிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் அதிக கார்கள் திருடுப் போகும் நகரங்கள் குறித்த அக்கோ கார்  இன்சூரன்ஸ் (ACKO Car Insurance) நிறுவனம் “திருட்டு மற்றும் நகரம்” என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது. நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 நகரங்களில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு  ஆய்வறிக்கையின் 2வது மதிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 2023 தரவுகளின்படி,, இந்தியாவின் தலைநகராக திகழும் டெல்லி  கார் திருட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்கு  ஒவ்வொரு 14 நிமிடத்துக்கு ஒரு வாகனம் திருடுப் போவதாகவும், சராசரியாக நாளொன்றுக்கு 105 வாகன திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் டெல்லியின் பஜன்புரா மற்றும் உத்தம் நகர் அதிக கார் திருட்டு நடக்கும் பகுதியாக உள்ளது. மேலும், ஷஹ்தரா, பட்பர்கஞ்ச் மற்றும் பதர்பூர் ஆகிய பகுதிகளிலும் சமீபகாலமாக அதிகளவிலான வாகன திருட்டுகள் நடைபெற்றுள்ளது என்றும், இதுபோன்ற திருட்டுக்கள்  குறிப்பாக செவ்வாய், ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில்  நடைபெறுவதாகவுமம் குறிப்பிட்டு உள்ளது.

இதற்கு காரணம், டெல்லியில் உள்ள கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி குறைபாடு காரணம் என்றும் தெரிவித்துள்ளதுடன்,  திருடப்படும் வாகனங்களின் பாகங்கள் பிரிக்கப்பட்டு உபயோக பொருள்கள் விற்பனை செய்யும் சந்தைகள் மூலம் எளிதாக விற்கப்படுகிறதுஎன்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டு உள்ளது.

டெல்லிக்கு  அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாமிடம் பெற்றுள்ளது. பெங்களூருவுக்கு மூன்றாம் இடம் கிடைத்து உள்ளது. ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைந்து காணப்பட்டாலும், கடந்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-ல் இரண்டு மடங்கு திருட்டு அதிகரித்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.