சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணையில், தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 25ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையைத் ( 13/03/24) தொடர்ந்து,  விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த  2011-2016 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அச்சமயம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அதன்பிறகு திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு, 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று அமைச்சரானார். மின்சாரத்துறை அமைச்சராக இருந்த அவரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

இது குறித்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன.

இதற்கிடையே, அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய விசாரணையைத் தொடர்ந்து, அடுத்த கட்ட விசாரணை மார்ச்  18ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் , முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வாக்கில்,  அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 25ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  மாநில போலீசாரின் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க கோரப்பட்டது.

ஆனால், அதற்கு அமலாக்கத்துறை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து,  செந்தில் பாலாஜி வழக்கறிஞர், மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதுடன்,   அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்று கூறியதுடன்,  செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்.25க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.