ஒரே ராக்கெட் மூலம் 103 வெளிநாட்டு செயற்கைகோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை பொருத்தி இஸ்ரோ வருகிற 27–ந் தேதி விண்ணில் செலுத்துகிறது.

இதன் மூலம் உலக சாதனை படைக்க இருக்கிறது இஸ்ரோ.

விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு போட்டியாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்.  செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்துவதற்கான  பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

இந்த ராக்கெட்டுகன் மூலம்  உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கை கோள்களை பொருத்தி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

அதன் காரணமாகவே உலக நாடுகள் தங்களது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்தியாவை நாடுகின்றன.

இதில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்களை இஸ்ரோவின் வணிகக்கிளை யான ‘ஆண்டிரிக்ஸ்’ நிறு வனம் மூலம் பெற்று, அதற்குரிய கட்ட ணத்தை அந்தந்த நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை இதுவரை விண்ணில் செலுத்தி இருக்கிறது.

இதில் 21 நாடுகளைச் சேர்ந்த 51 நிறுவனங்களுக்கு சொந்தமான 79 வெளிநாட்டு செயற்கை கோள்களும், உள்நாட்டைச் சேர்ந்த 42 செயற்கைகோள்களும் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 103 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் செலுத்தி விண்ணில் நிலை நிறுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். ஏற்கனவே 83 செயற்கை கோள்கள் என்று அறிவிக்கப்பட்டருந்தது. தற்போது அது 103 ஆக உயர்ந்துள்ளது.

இதற்காக நானோ வகை செயற்கைகோள்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோள்கள் ஆய்வு செய்யப்பட்டு ராக்கெட்டுகளில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ராக்கெட்டில், வானிலையை துல்லியமாக கணித்து கூறும் கார்ட்டோ சாட்–2டி உள்ளிட்ட 103 செயற்கைகோள்களை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

அதன்படி பி.எஸ்.எல்.வி. சி–37 ராக்கெட், வருகிற 27–ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இந்த ஆண்டு ஏவப்படும் முதல் ராக்கெட் இது வாகும்.  இதன்மூலம் இந்தியாவும், இஸ்ரோவும் உலக சாதனை பட்டியலில் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.

ரஷியாவின் விண்வெளி நிறுவனம் கடந்த 2014–ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 37 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வரலாற்றில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி மையம் கடந்த 2013–ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 29 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியது.

ஆனால், இஸ்ரோ கடந்த ஜூன் 22ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி–சி34 ராக்கெட் மூலம் 1,288 கிலோ எடைகொண்ட 22 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து உள்ளது.

தற்போது சி-37 ராக்கெட்மூலம் 103 செயற்கை கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளது.

 

இஸ்ரோவின் இந்த முயற்சி வெற்றிபெற இந்தியர்கள் அனைவரும் வாழ்த்துவோம்-.