டில்லி,

ண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, ஏழை மக்களுக்காக தொடங்கப்பட்ட  ஜன்தன் வங்கி கணக்குகளில் 41,523 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வங்கி சேவையை அதிகரிக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்கு வதற்காகவும் மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி வங்கி கணக்கு தொடங்குவதற்கு டெபாசிட் பணம் கட்ட தேவையில்லை. ஜீரோ பேலன்ஸ் திட்டத்தில் இந்த வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. சுமார்  48 லட்சத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டன.

இந்த ஜன்தன் கணக்குகளில் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்பது குறிப்பிட்த்தக்கது.

இவ்வாறு தொடங்கப்பட்ட பெரும்பா லான வங்கி கணக்குகளில் மக்கள் சிறிதளவே பணம் போட்டு வைத்தி ருந்தனர். ஆனால், பெரும்பாலான  கணக்குகள் பூஜ்ஜியமாகவே வந்தன.

இந்நிலையில், கடந்த நவம்பர் 8ந்தேதி ரூ.500, 1000 செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபிறகு, மக்கள் தங்க ளிடம் இருக்கும் மேற்படி ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து கொள்ள வும் மத்திய அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருந்த செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை  தங்கள் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தனர். அதேபோல்  ஜன்தன் கணக்குகளிலும் ஏராளமான பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த கணக்குகளில் கடந்த நவம்பர் 9-ந்தேதிப்படி ரூ.45,637 கோடி பணம் இருந்தது. பின்னர் கடந்த மாதம் 23-ந்தேதி வரையிலான 45 நாட்களில் மட்டும் ரூ.41,523 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப் பட்டு, மொத்தம் சுமார் ரூ.87,100 கோடி அளவுக்கு உயர்ந்து இருக்கிறது.

இதன் மூலம் ஜன்தன் கணக்குகளின் டெபாசிட் தொகை தற்போது ஏறக்குறைய இரட்டிப்பு ஆகி இருக்கிறது.  இதில் 4.86 லட்சம் கணக்குகளில் நவம்பர் 30-ந்தேதி வரை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

இதைப்போல ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் 2 வாரங்களில் மட்டுமே ரூ.20,224 கோடி அளவுக்கு டெபாசிட் குவிந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக இந்த தொகை குறைந்துள்ளது.

இதற்கு மத்திய அரசின் அறிவிப்பும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கருப்பு பண முதலைகள்  பலர்  தங்களுக்கு தெரிந்தவர்களின், உறவினர்கள், வேலைக்காரர்களின்  ஜன்தன் கணக்குகளில் தங்கள் கருப்பு பணத்தை டெபாசிட் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் வருமான வரிச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர் என நவம்பர் 18-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதன் அடுத்தக்கட்டமாக ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்ட பெருந்தொகையில் இருந்து கணிசமான தொகை எடுக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது.

அந்தவகையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.3,285 கோடி எடுக்கப்பட்டு இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு இருக்கிறது.

பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த கணக்குகளில் இருந்து மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த சூழலில், எவ்வாறு இவ்வளவு பெரிய தொகை எடுக்கப்பட்டது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.