டெல்லி: கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறிய உச்சநீதி மன்றம்,  ஆனால் கோயில்களில் “விஐபி தரிசனம்” வசதிகளை நிறுத்தக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது

கோயில்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு “விஐபி தரிசனம்” மற்றும் “முன்னுரிமை, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சிறப்பு சிகிச்சை” என கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறைக்கு எதிரான பொதுநல மனுவை  விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

இன்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கோயில்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், கோயில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரம்பு இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.  மேலும்,  கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாகக் கூறி உள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது,  இந்தப் பிரச்சினையை சமூகமும் கோயில் நிர்வாகமும்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறியது.

“சிறப்பு சலுகைகள் வழங்கப்படக்கூடாது என்று நாங்கள் கருதினாலும், இந்த நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அரசியலமைப்பின் 32வது பிரிவின்கீழ் அதிகார வரம்பைப் பயன்படுத்துவது பொருத்தமான வழக்கு என்று நாங்கள் நினைக்கவில்லை. இருப்பினும், மனுவைத் தள்ளுபடி செய்வது பொருத்தமான அதிகாரிகள் தேவைக்கேற்ப பொருத்தமான நடவடிக்கை எடுப்பதைத் தடுக்காது என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்,” என்று பெஞ்ச் கூறியது.

மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆகாஷ் வசிஷ்டா, 12 ஜோதிர்லிங்கங்கள் இருப்பதால் சில நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் தேவை என்றும், இது முற்றிலும் தன்னிச்சையான “விஐபி தரிசனம்” நடைமுறை என்றும் வாதிட்டார்.

விருந்தாவனத்தில் உள்ள ஸ்ரீ ராதா மதன் மோகன் கோயிலின் ‘சேவைட்’ விஜய் கிஷோர் கோஸ்வாமி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்த நடைமுறை அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 21 இல் குறிப்பிடப்பட்டுள்ள சமத்துவக் கொள்கைகளை மீறுவதாகவும், கட்டணத்தை செலுத்த முடியாத பக்தர்களுக்கு பாகுபாடு காட்டுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோயில் தெய்வங்களை விரைவாக அணுகுவதற்கு வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் குறித்தும் மனுவில் பல கவலைகள் எழுப்பப்பட்டு உள்ளன.

சிறப்பு தரிசன சலுகைகளுக்கு ₹400 முதல் ₹500 வரை கட்டணம் வசூலிப்பது, வசதி படைத்த பக்தர்களுக்கும், குறிப்பாக பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், ஆந்திராவிற்கு ஒரு உத்தரவு மட்டுமே பிறப்பிக்கப்பட்டது என்றும், உத்தரகண்ட், உத்தரபிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்கள் கவனிக்கப்படாமல் இருந்தன என்றும் அது கூறியது.

எனவே, கூடுதல் கட்டணம் வசூலிப்பது சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

கோயில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் சமமான சிகிச்சையை உறுதி செய்வதற்கான வழிமுறைகளையும், கோயில்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மையமாகக் கொண்டு வகுக்க வேண்டும் என்றும் அது கோரியது.

சித்திவிநாயகர் கோயில் குட்டையான ஆடைகளைத் தடை செய்கிறது, பக்தர்கள் ‘இந்திய உடையை’ அணியுமாறு கேட்டுக்கொள்கிறது என்றும் விசாரணையின்போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும்,   நாடு முழுவதும் உள்ள கோயில்களின் மேலாண்மை மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிட ஒரு தேசிய வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

ஆனால் இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன்,  கோயில்களுக்குள் நுழைவதில் யாருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று வாய்மொழியாக கூறி வழக்கை முடித்து வைத்தது.